’2.0’ எப்போது வெளியாகும்? கதை என்ன? அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!


இரண்டு ரோபோக்களுக்கு இடையே காதல் வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘2.0’ படத்தின் கதைக்களம். அந்த இரண்டு ரோபோக்களில் ஒன்று விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது. அதற்கு அனைத்து உணர்ச்சிகளும் வந்துவிடுகின்றன. அந்த இன்னொரு ரோபோ பற்றிய தகவல் பரம ரகசியம் என்கிறது 2.0 படக்குழு


உலோக இதயங்களின் காதலை மையப்படுத்தினாலும் இதில் ரோபோக்களின் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும், மனிதர்களை ரோபோக்கள் எப்படிப் பார்க்கின்றன ஆகிய இரண்டு அம்சங்களை ஷங்கர் காட்சிகளின் வழியே கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முழுக்க ரோபோக்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பதால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் குறைவுதான், ஆனால் ரஜினி உருவத்தில் இருக்கும் 3டி அனிமேஷன் ரோபோவின் அதிகளம்தான் முழுப் படமும் என்கிறது படக்குழு.


3டி அனிமேஷன் கதாபாத்திரங்களை நடக்கவும் பேசவும் சண்டைபோட வைக்கவும், கிராஃபிக்ஸ் பணிகளே படம் தாமதம் ஆகக் காரணம் எனத் தெரியவந்திருக்கிறது.


2015ஆம்  ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி ‘2.0’ படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் முக்கியமான, ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் ஆகிய மூன்று கதாபாத்திரங்களையும் கிராபிக்ஸில் உருவாக்கி அவற்றை நடக்க, ஓட வைக்கும் முக்கியப் பணி நடைபெற்று வருகிறதாம்.


இந்தப் பணியை ஏற்றுச் செய்துவந்த நிறுவனம் திடீரென மூடவேண்டிய நிலை ஏற்படவே, அந்நிறுவனம் செய்தவரையிலான பணிகளை எடுத்துச் சென்று அமெரிக்காவிலுள்ள மற்றொரு நிறுவனத்திடம் கொடுத்ததாம் ‘2.0’ குழு.


இந்தப் பணியை முடிக்க அந்த நிறுவனம் ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. 3டி கதாபாத்திரங்களைக் கொண்டே முக்கியமான காட்சிகளை நகர்த்தவேண்டி இருப்பதால், இந்த கிராஃபிக்ஸ் வேலையை முதலில் முடிப்போம் என்ற நிலைக்கு ‘2.0’ குழு தள்ளப்பட்டு இருக்கிறதாம்.


2.0 படத்தைத் தொடக்கத்தில் 8K காட்சித் தரத்தில் படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள். அந்தக் காட்சிகளை கம்ப்யூட்டரில் தரவிறக்கி, கிராஃபிக்ஸ் செய்து எடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்னர்.


8K காட்சிகளின் அளவு பெரிதாக இருந்த காரணத்தால் அவற்றை கிராஃபிக்ஸில் கையாள்வது பெரும் சவாலாக இருந்தது. 8K வில்  ஒரு ப்ரேம்மை விட்டு அடுத்த ப்ரேமுக்கு செல்லவே அரைமணி நேரம் பிடித்திருக்கிறது.


இப்பிரச்சினை தொடங்கியவுடன் விழித்துக்கொண்ட படக்குழு 4K காட்சித் தரத்தில் படப்பிடிப்பை மாற்றிக்கொண்டுவிட்டதாம்.


பார்வையாளர்களுக்கு 3டி அனுபவத்தை வழங்குவதற்காக மொத்த படத்தையும் 3டி கமராவில் படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள்.


2.0 படத்திலும் பிரம்மாண்ட இறுதி சண்டைக் காட்சியை வடிவமைத்து இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர். இதை முழுவதுமே கிராஃபிக்ஸில்தான் உருவாக்க வேண்டுமாம். இந்த சண்டைக் காட்சியில் மோதும் ரோபோக்கள் சிலநொடிகளுக்கு ஒருமுறை வெவ்வேறு தோற்றத்துக்கு மாறுவது போன்று காட்சி வடிவமைக்கப்பட்டு இருப்பதால் விழிபிதுங்கி நிற்கிறதாம் கிராஃபிக்ஸ் குழு.


கிராஃபிக்ஸ் காட்சிகளைப் பொறுத்தவரை, இயக்குநர் ஷங்கர் எவ்வித சமரசமும் செய்து கொள்ளமாட்டார் என்கிறார்கள்.


கிராஃபிக்ஸ் குழுவில் உள்ள கண்காணிப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது “வெளிநாட்டில் மிக முக்கியமான கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்த பிறகே படம் எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியும்” என்றார்.


வெளிநாட்டுப் பணிகள் முடிவடைந்தவுடன் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை கிராஃபிக்ஸ் காட்சிகளை இணைக்கும் வேலைகள் தொடங்கும். இதற்கு மட்டுமே இரண்டு மாதங்கள் தேவைப்படும்.


அதன்பிறகு வர்ணமூட்டும் வேலைகள் தொடங்கும். இதில் நடிகர்கள் நடித்துப் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் இருக்கும் வண்ணமும் கிராஃபிக்ஸ் காட்சிகளில் இருக்கும் வண்ணத்தையும் சமன் செய்து ஒரேமாதிரி தோன்றச் செய்யும் ஜாலம் இது இதற்கு மூன்று மாதங்கள் பிடிக்கும்” என்கிறார்கள்.


இதற்கிடையில் 400 கோடி ரூபாய்க்கு (இந்திய நாணயம்) திட்டமிடப்பட்ட ‘2.0’ கிராஃபிக்ஸ் வேலைகள் கூடிக்கொண்டே செல்வதால் தற்போது அது 600 கோடியை நெருங்கும் என்று தயாரிப்புத் தரப்பில் தகவல் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *