தமிழ் குடும்பத்தை பலவந்தமாக கைதுசெய்து நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசு முடிவு


அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து தஞ்சமடைந்திருந்த தமிழ் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு தமிழ் ஏதிலிகள் கழகத்தினால் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலிய எல்லைப்படையினரும், பொலிஸாரும் அக்குடும்பத்தை பலவந்தமாக பிலோலவில் இருந்து அப்புறப்படுத்தி சுமார் 2500 கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கிற மெல்பேர்ண் நகரின் தடுப்புமுகாமில் தடுத்துவைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பத்து நிமிடங்கள் மட்டுமே அக்குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவும், அந்நேரத்தில் கையில் அகப்பட்ட சில உடைகளை மாத்திரம் ஒருபையில் அள்ளிக்கொண்டு வந்ததாகவும் குடும்பத்தலைவி பிரியா தெரிவித்துள்ளார்.

பிரியா, அவரின் கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 9 மாத குழந்தை தருணிகா , 2 வருட குழந்தை கோபிகா ஆகியோரைப் பலவந்தமாக ஏற்றுவதைப் பார்த்த அண்டைவீட்டுப் பெண்மணி ஹாலிவுட் திரைப்படத்தை போன்ற சம்பவங்கள் நடந்தேறியதாகக் தெரிவித்துள்ளார்.

2013இல் ஆஸ்திரேலியா சென்ற நடேசலிங்கம் மற்றும் பிரியா 2014ஆம் ஆண்டு திருமணம் முடித்து பல வருடங்களாக பிலோலாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இது குறித்து மெல்பேர்ண் தடுப்புமுகாமிலிருக்கும் பிரியாவுடன் பேசியபோது "விடியற்காலை 5 மணியளவில் என் வீட்டு கதவை தட்டிய அதிகாரிகள் எங்களை Melbourne அகதிகள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வதாகவும் பத்து நிமிடத்தில் தேவையான உடைமைகளை எடுத்துக்கொள்ளும்படியம் கட்டளையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரியாவும் அவரின் கணவரும் தனித் தனியாக இரு வாகனங்களில் Gladstone விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

குழந்தைகள் பிரியாவுடன் சென்றிருந்தாலும் கூட வாகனத்தில் பிரியாவுடன் குழந்தைகளை இருக்கவிடவில்லை. அவரின் கெஞ்சல்களுக்கு பிறகும் கூட குழந்தைகள் தாயிடம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Melbourne ல் சிறை வைக்கப்பட்ட பிறகு, தமது விருப்பின்பேரில் நாடு திரும்புவதாக ஒப்புக்கொண்டு ஆவணங்களில் கையெழுத்திட காவலர்கள் கட்டாயப்படுத்தினர் எனவும், கட்டளையை மறுத்தால் தானும் கணவரும் தனித்தனியாக இலங்கை கடத்தப்படுவோம் என்றும் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் 4இல் பிரியாவின் இணைப்பு விசா முடிவடைந்த தருவாயில் தனது விசாவை புதுப்பிப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தங்களை நாடு கடத்த வேண்டாம் என்று கதறி கெஞ்சியுள்ளனர். நம்பிக்கை தளர்ந்த நிலையில் செவ்வாய் மதியம் காவலர்கள் தந்த ஆவணங்களில் கையெழுதிட்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன் ஒரு தமிழ் வாலிபர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்போது இன்னொரு நாடுகடத்தலுக்கு அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டு வருகின்றது.

ஏற்கனவே நாடுகடத்தப்பட்டவருக்கு சிறிலங்கா அரச புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து, மிரட்டி வந்தனர். இப்பொழுது பிரியா குடும்பத்தினருக்கும் அம்மாதிரி நாடு கடத்தப்படும் சூழ்நிலை வந்துவிடுமோ என்று அவர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதேவேளை, இந்தக் குடும்பம் பலவந்தமாக தடுப்புமுகாமுக்குக் கொண்டுவரப்பட்ட முறைமையும் அதுவும் அவுஸ்திரேலியாவிலேயே பிறந்து வளரும் இரண்டு குழுந்தைகளையும் நாடுகடத்த முற்படுவதும் அவுஸ்திரேலியாவில் பொதுமக்களிடத்திலும் அகதிகள் செயற்பாட்டு இயக்கங்களிடத்திலும் பெரும் விசனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரியா, நடேசலிங்கம், தருணிகா மற்றும் கோபிகாவை Biloela விலுள்ள அவர்கள் இல்லத்திற்கு திரும்ப அனுப்ப ஆஸ்திரேலியா அரசிடம் தமிழ் ஏதிலிகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழ் ஏதிலிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரபட்டுள்ளது.

இதன்மூலம் அவர்கள் குழந்தைகளை தொடர்ந்து அமைதியான வாழ்க்கை முறையில் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment